Saturday, February 18, 2012

எம்பெருமான்

உயிரும் குருதியும் ஊற்றி
வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில்
வாழ்வே தவறி விழுவதுதான்
எப்போதும் நிகழ்கின்றது.

ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந்து
கரைந்தோடிவரும் சாம்பல்
நிலங்களில் வரையும் ஓவியங்கள்
அறிவுக்கும் அது ஆட்சி செய்யும் உணர்வுக்கும்
அர்த்தம் புலப்படாதவை

உலக ஜனநாயகச் சந்தையில்
மீந்துபோன பொருள்களை
மலிவாகவோ இனாமாகவோ
பெற்றுவிடத் துடிக்கும்
எம் சித்தாந்தவாதிகளாலும்
புத்திசீவிகளாலும் புரிந்துகொள்ள முடியாதவை

மழைக்கு முன் வயல்க் கரைகளில்
தோகைவிரித்தாடும் மயில்கள்
இப்போது என்னும் வண்ணமயமாய்
வயலுக்குத் தூரத்தே வெட்டவெளிகளில்
கந்தசட்டி கவசத்தை இறுவெட்டில் இசைத்து
ஆடிக்கொண்டிருக்கின்றது

சாம்பலை நெற்றியில் பூசி
தாண்டவமாடும் கந்தனின் தந்தை
சூலாயுதத்தை கமக்கட்டுக்குள் வைத்த
தலைகவிழ்ந்து நிற்கின்றார்

பிள்ளைவாழ்கள் சொல்கேட்டு
பிள்ளை விழையாடிய பிள்ளை விழையாட்டு
சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது
பழமொழி சரியென பழையகமங்களுக்கு தெரிந்தபோது
சூனியக்காரனின் மண்டையோட்டுக்குள்
எங்கள் ஆத்மா அடைக்கப்பட்டுவிட்டது

மழை நீரை பிடித்து பனையில் ஏறும்
பனையேறி மீனைப்போல்
ஒரு கணம் கடும் சினத்தைப் பிடித்து
நியாயத்தின் மீதேறி சன்னதமாடத் துடிக்கும்
அடிமையின் கனவு கலைந்து போகும் தருணங்களில்
எங்கள் வாழ்வு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

வினைகள் செத்துப்போய்
வெற்றுடலாய் கிடக்கும்போது
வினைக்கு மறுவினை பிறந்தால்
நாம் வாழ்ந்ததாக கடந்துசெல்லும்
ஒவ்வொரு கரிநாளும் எமக்குத் திருநாளே

Tuesday, June 8, 2010

தமிழ் கட்டும் கோவணம்






எஞ்சியது வெறுமை மட்டும்
அதை எனது தொடர்புக் கருவியான
தமிழில் எழுதுகின்றேன்

இந்தக் கருவி மட்டும்
கர்வத்துடன் இருக்கின்றது
எனது உணர்ச்சிகளுக்கும்
இந்தக் கருவிக்கும்
தொடர்பில்லாமல் போய்விட்டது
நான் அம்மணமாக நிற்கின்றபோதும்
நான் பேசும் மொழி கோவணத்துடன் நிற்கின்றது
பணமும் அதிகாரமும் உள்ளவர்கள்
எனது கோவணத்தை உருவி
நான் பேசும் மொழிக்கு கட்டுகின்றார்கள்
அதைப் பார்த்து
எம்மை கைகொட்டி ஆரவாரம்
செய்ய வற்புறுத்துகின்றார்கள்
ஆனால் எனது பிறப்புறுப்பை
எனது இருகைகளால் பொத்தவேண்டியிருக்கின்றது
என்பதை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்

நான் எப்ப சிரித்தேன் என்று நினைவில்லை
அழுகைகள் தான் என்னுடன் கூட வருகின்றது
நான் தமிழில் அழவில்லை
ஆங்கிலம் பிரஞ்சு யேர்மன் எந்த மொழியிலும் அழவில்லை
அதற்கு மொழி இல்லை
கோவணத்துடன் நிற்கும் இந்த மொழியால் அதை புரிந்துகொள்ள முடியாது
எமது காதில் கேட்ட வெடிச்சத்தங்களும் மொழிக்குள் அடங்காது
எமது காதில் கேட்ட கதறல்களும் ஒப்பாரிகளும் மொழியற்றவை
அதற்கு எந்த கெளரவமும் தேவை இல்லை
ஏனெனில் அவை என்னுடன் நிர்வாணமாய் இருக்கின்றது
அழுவதற்கு எந்த மொழியும் தேவையில்லை

Sunday, August 3, 2008

காட்சிப் பிரிவுகளின் கனவுப் பிரிவுகள்

அழகான குளத்தில்
அலையில்லாத
நீரின் நெளிவுகள்

ஆற்றின் ஓரத்தில்
வழைந்து படபடக்கும்
நாணல்கள்

காலைகளில்
வயல் வெளிகளில்
பயின் நுனியில்
இருந்து யோசிக்கும்
பனித்துளிகள்

தேனிக்கள் முட்டும்போது
ஆடும் பூக்கள்

தென்னோலைகளில்
ஊஞ்சல் ஆடும்
தூக்கணாங் குருவிக் கூடுகள்

நேராக வர
புடலங்காயில்
தொங்க விட்ட கற்கள்

பச்சைக் கொடியில்
மஞ்சளாய் ஒழிந்து பழுத்த
பாகற் பழங்கள்

வேலிக்குள் நுளையாமல்
கழுத்து மட்டை அடித்த
வெள்ளாடுகள்

தூரத்துப் பனையில்
கள் முட்டியோடு ஏறும்
சீவல் காரன்

முழு நிலவு பின்னிரவில்
பொன்னிறம் மிளிரும்
தரவைக் கடலில்
றால் பிடிக்கும் படகுகள்

வயல் நடுவில்
திடீர் என்று வளர்ந்த
மஞ்சள் குன்று நெற் சூடுகள்

இலைகளுள் மறைந்தாடும்
கிளி கொத்திய மாம்மழத்தின்
மஞ்சள்

இரவுகளில் தொப்பென்று விழும்
பனம் பழத்தின் சத்தங்கள்

கால்வாயில்
மிதந்து வரும்
குறுனிப் பூக்கள்

அலாரத்தின் விழிப்பில்
கலைந்து போன
உலத்தல் கனவு

வேலை நோக்கி
விரைகின்றது கால்கள்
ஒரு கறுத்த முகத்தை
சுற்று முற்றும் பார்த்து
தோற்றபடி

சன்னலுக்கு வெளியே
வேகமாக ஓடுகிறது
விளம்பரப் பலகைகள்
பயணம் தொடர்கிறது...

Thursday, July 10, 2008

அன்றய பொழுதுகளின் விசாரணை

நெருஞ்சி முட்செடிகள்
மஞ்சாளாய் பூத்துக் குலுங்கியது
ரசிப்பது இயல்பில்லை
செருப்பில்லாத கால்கள்
முட்களையே நினைவுபடுத்தின

மாடப்புறாக்கள்
கூட்டமாக வரும்
வடிவுதான்
இருந்தும் பிடிக்காது
விதைத்த நெல்லை
தின்றழித்துவிடும் கோபம்
நின்று நினைவை உறுத்தும்

தொல்லை இல்லாத
கொக்குகள் பிடிக்கும்
பொழுதுசாயும் நேரம் கூடு திரும்பும்
நாம் வீடு திரும்பும் போது
கூட்டமாக கூடு திரும்பும்

புளு பூச்சிகளிலும்
நிறைய பிடிக்கும்
நிறைய பிடிக்காது
விலங்குகளிலும்
நிறைய பிடிக்கும்
நிறைய பிடிக்காது

பசுவையும் எருதுகளையும்
எப்போதும் பிடிக்கும்
இருந்தும்
இறுதியில் அடிமாடுதானே
சந்தையில் ஒரு நாள்
சிவப்பாக தொங்கும்

விருப்பு வெறுப்புகளுக்கு
நிச்சயம் ஏதேதோ காரணங்கள்
செயலுக்கும் ஏராளமான
காரணங்கள் நியாயங்கள்

காரணமில்லாத பொழுதுகள்
கனவில்லாத நித்திரைகள்
நேற்றும் நாளையும் இல்லா
இன்றய நாட்கள் எதுவும் இல்லை
அப்படி எதுவும் தேவையும் இல்லை?

தேம்பும் போதும்
சிரிக்கும் போதும்
சிலநேரம் கலவியின் உச்சத்தில்
முக்கி முனகும் போதும்
மொழி இழந்த சத்தங்கள்
கவனிக்கப்படுவதில்லை
காரணங்கள் வலுவாக இல்லை

அவளை பார்க்கும் போது
அடிவயிற்றில் இருந்து தொண்டை வரை
ஏதெதோ பிரண்டு உருளுது என்றான்
பின் வாயு மாத்திரை வாங்கி
இரண்டு வேளை சாப்பிட்டான்
காரணங்கள் வலுவாக இல்லை
உலகம் றொம்ப அர்த்தத்துடன்
வேகமாக சுற்ற தொடங்கி விட்டது?

வெளிப்படையான காரணங்கள்
புரிந்து கொள்ள கூடிய காரணங்கள்
இல்லாவிடில்
நேரமில்லை இந்த
சதைகளின் பரிதவிப்புகளுடன் மினைக்கெட

Friday, April 18, 2008

இழப்பின் முடிவு

சில இரவுகளின் கனதி


சில துளி கண்ணீராக


குறைந்து போகும்


சேமிக்க வேண்டிய துளிகளும்


கணாமல் போய் விடுகின்றது



பாரமில்லாத இரவுகளில்


எதுவும் பூர்த்தியாவதில்லை


இழந்தவைகளை விட


கனதியில்லா இரவுகள்


பெறுமதியாக இல்லை





வழிகாட்டிய தாய்


இடையில் இறந்தும்


நீண்ட தூரம் நடந்துவிட்டேன்


யார் காட்டிய பாதை என்பதறியாமல்





இழப்பை அழுது மறக்கின்றேன்


நான் முட்டு சந்தில் நிற்பதை


நானே மறந்து நிற்கின்றேன்


ஏனெனில்


கனதியான இரவுகளை


லேசாக்க தெரிந்தவன்


அழுகை எனது


சுயநலம் என்பதை


அறிய நீண்டநாள் ஆகிவிட்டது





திரும்பி நடப்பதை தவிர


வேறு வளியில்லை என்று


திரும்பி பார்க்கின்றேன்


வந்த பாதையையும் காணவில்லை





அருகில் நின்ற


என் பிள்ளைகள் எங்கே


சுற்றிப்பார்க்கின்றேன்


திசைக்கொன்றாக


ஓடத்தொடங்கிவிட்டார்கள்





திரும்பி இவ்விடம் வருவார்களா


காத்திருக்கலாமா


இல்லை


எனக்கு வந்த திசை நினைவிருக்கு


அவர்களுக்கு இப்போது


போகும் திசை தெரியாது


எனவே


வர முடியாது




இழந்ததையும்


இப்போது தொலைத்ததையும்


நினைத்திருந்தால்


எஞ்சி நிற்கும் உயிருக்கு


கொஞ்சம் பெறுமதி


அதையும் அழுது


தொலைக்கின்றேன்


என்னை அடயாளப்படுத்த


என்னவார்த்தை?

Friday, February 29, 2008

கடவுள்







உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பே ஆலையம்
வள்ளல் பிரானுக்கு
வாய் கோபுர வாசல்
தெள்ள தெளிந்தார்க்கு
சீவன் சிவலிங்கம்

திருமூலர் சொன்னது

உயிர் தான் கடவுள்
இந்த ஜீவன்களுக்குள்ளும்
கடவுள் இன்னும் இறக்கவில்லை

கடவுள் இங்கே
இதை விடுத்து
எங்கே தேடுகின்றாய் மானுடனே?

கண்ணுக்கு முன்னால்
கடவுள்
காணிக்கையை அவரிடம்
நேரடியாய் கொடுத்துவிடு


ஆலயங்கள் இடிகின்றது
சீவன் சாகிறது
கடவுளிடம் இருந்து
விலகாதே மானுடனே

கருங்கல்லை கடவுள் என்று
வைக்கலில் ஊறிய பசும்பாலை
கல்லின் மேல் உற்றி
கருணையற்றவன் ஆகாதே
உயிருள்ள கடவுளின்
வாய்கள் வறண்டு கிடக்கின்றது.

மலைபோல் தேங்காய்களை
சபரிமலையில்
விரையமாக்கதே
கடவுளிடம் நேரடியாய் கொடுத்துவிடு

பட்டுப்பூச்சிகளை கொன்று
பட்டு நெய்து
பட்டாபிசேகம் என்னும்
பாபத்தை செய்யாதே
அந்த பணத்தை
பசியோடு இருக்கும் கடவுளுக்கு
பாசமாய் கொடுத்து விடு
நேசமாய் கடவுளுடன்
கூடியிரு

உனக்குள் இருக்கும்
உயிர்தான் கடவுள் என்று
உணர்ந்து விடு
கடவுள்களுடன்
கைகோர்த்துவிடு

கடவுள் என்று சொன்னார்
கடந்து உன்னுள் சென்றுவிடு.


-சின்னா

மழை நினைவுகள்

விண்மீன்கள் கண்ணுக்கு தெரியாத
காரிருள்
மின்சாரமில்லாததெருக்களில்
ஈசல்கள் ஊர்வலம்

முகத்திலடிக்கும் வண்டுகள்
கண்ணுக்கள் சென்றுவிட்டால்
கண்ணீருடன் வெளிவரும்
கசக்கி விட்டால்
மிச்சமும் சூனியம்

மல்லுக்கட்டும்
மாரித்தவளைகளின்
சத்தம் ஒரு சங்கீதம்

வெட்டும் மின்னல்
விடலைப்பயிர்களை
புகைப்படம் எடுக்கும்

தூறல்கள் சாரல்கள்
எங்கும் நனையும் உடம்பில்
தலைமட்டும்
உரப்பையின் முக்கோணத்துள்
தப்பிவிடும்

மக்காட்டில்லாத சைக்கிள்
சேறை வாரி
முதுகிலடிக்கும்
தூறல்கள் கழுவி விடும்

பற்கள் குளிரில் கிடுகிடுக்கும்
கண்ணாடிப்பையில்
சுத்தி வைத்த வீடி
சொர்கத்தை நினைவு படுத்தும்

நெருப்பு பெட்டியை
கமக்கட்டுள் வைத்து
சூடேற்றி பற்றவைத்து
சடுதியில் ஒரு சாதனை

வீட்டின் மூலையில்
புகையும் நெருப்புச்சட்டியில்
குளிர்ந்த கைகளை
சூடேற்றுவது சுகம்

கிடுகு கசிந்து
ஒழுகும் இடத்திலெல்லாம்
கிண்ணம்

கிண்ணத்தில் விழும்
ஒழுக் கின் ஓசையின்
இதமான தாலாட்டில்
அணில்கோடன் சாக்குள்
ஆசுவாசமாக காலை விட்டு
சற்று நேரத்தில் குறட்டை விட்டு
நிம்மதியான நித்திரை

கருக்கலில் எழும்பி
மீண்டும் நடையை கட்ட
விரட்டும் வெயில்
வேர்வை தெறிக்க
இரவின் குளிர்
வேண்டும் எனும்
மீண்டும் மனம்
-சின்னா

எம்பெருமான்

உயிரும் குருதியும் ஊற்றி வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில் வாழ்வே தவறி விழுவதுதான் எப்போதும் நிகழ்கின்றது. ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந...